சென்னை ஆவடி குமரன் நகரைச் சேர்ந்தவர் மனோகரன் (58). இவர் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தனது உறவினர்களான சேகர் (55), விஜயலட்சுமி (38), வைஷ்ணவி (29) ஆகியோருடன் தனது காரில் சித்தூர் சென்றுவிட்டு சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.
காஞ்சிபுரம் அருகே தாமல் என்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக சாலையின் இடதுபுறமுள்ள ஒரு கல்லின் மீது கார் ஏறி இறங்கியது. இதில், கட்டுப்பாட்டை இழந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையின் ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியின் மீது மோதியது.
இந்த விபத்தில், காரை ஓட்டிச் சென்ற மனோகரன் உள்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர். ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் ஏனாத்தூரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அப்போது, சேகர் என்பவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த பாலுசெட்டிசத்திரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கூலி தொழிலாளி உயிரிழப்பு