காஞ்சிபுரம் காமகோடி பீடத்தில் 69ஆவது பீடாதிபதியாக இருந்து மறைந்த ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 87ஆவது ஜெயந்தி விழா காஞ்சிபுரம் சங்கர மடம் சார்பில் நடைபெற்று வருகிறது.
புத்தக வெளியீட்டு விழா
இந்த விழாவில் கலந்துகொள்ள தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார். காஞ்சிபுரம் சங்கர மடத்தில் அமைந்துள்ள சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரின் பிருந்தாவணங்களை அவர் தரிசித்தார்.
பின்னர் காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் மணிமண்டபத்தில் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.
ஆளுநர் பெருமிதம்
இதில் ஆந்திரப் பிரதேச முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரா சௌத்திரி எழுதிய வியட்நாம்-கம்போடியா நாட்டில் 'இந்துக் கோயில்கள்' எனும் நூலை, இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு காணொலி காட்சி வாயிலாகவும், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரிலும் வெளியிட்டு சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், "நமது இந்திய நாடு, ஆன்மீக கலங்கரை விளக்கமாக விளங்குகிறது. மேற்கத்திய உலகம், பொருள் சார்ந்த முன்னேற்றத்தை மட்டுமே அடைவதற்கான ஒரு ஓட்டத்தில் இருக்கும்பொழுது, நமது நாடு கலாசாரத்தையும், ஆன்மீக முன்னேற்றத்தை அடைவதற்கான உணர்வை செலுத்துகிறது" என்று பெருமிதத்துடன் கூறினார்.
நலத்திட்ட உதவிகள்
மேலும் ஆளுநரின் விருப்ப நிதியிலிருந்து காஞ்சிபுரத்தில் மருத்துவ ஆய்வகத்தை நிறுவுவதற்கு ஸ்ரீ சங்கரா கிருபா கல்வி, மருத்துவ அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடையும் வழங்கினார்.
பின்னர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், தெருக்கூத்து கலைஞர்களுக்கும் சங்கர மடத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகளை ஆளுநர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்களும், சங்கர மடத்தின் ஆன்மீக மக்களும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'தென்காசி- பிணத்தின் தலையுடன் சாமியாட்டம்- போலீஸ் விசாரணை!'