சீன அதிபர் ஸி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி 11ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்தில் இருநாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். 63 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1956ஆம் ஆண்டு மாமல்லபுரத்திற்கு வருகை புரிந்த சீன பிரதமர் சூ என்லாய், மாமல்லபுரம் அருகே 9 கி.மீ. தொலைவில் உள்ள குழிப்பாந்தண்டலம் என்னும் கிராமத்தில் மகப்பேறு, குழந்தைகள் நல மருத்துவமனையை திறந்து வைத்துள்ளார்.
இதுகுறித்து குழிப்பாந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூறுகையில், "கடந்த 1956ம் ஆண்டு சீன பிரதமர் சூ என்லாய் இங்கு வந்தபோது இந்த மருத்துவமனையை திறந்து வைத்தார். சமீபத்தில்தான் இந்த மருத்துவமனையை புனரமைத்தனர். அப்போது சீன பிரதமர் அளித்த பட்டயத்தை தொலைத்து விட்டார்கள். அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று அங்கிருப்பவர்களுக்கு தெரியவில்லை. 1954ஆம் ஆண்டு இந்த கிராமம் 'நேரு விருது' பெற்றுள்ளது.
அச்சமயத்தில் ஏராளமானோர் வருகை புரிந்தனர். சீன பிரதமர் தவிர்த்து அமெரிக்காவின் மார்ட்டின் லூதர் கிங், காமன்வெல்த் பொதுச்செயலாளர் ஹோவார்ட்டி எவ்வில்லே போன்ற ஏராளமான வெளிநாட்டினரும் இக்கிராமத்திற்கு வந்துள்ளார்கள். நாட்டிலேயே முதல்முறையாக இந்த கிராமத்தில்தான் குறைந்த விலையில் வீடு கட்டும் திட்டத்தில் கூரைகள் மாற்றப்பட்டு, ஓட்டு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இக்கிராமத்தில் உள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக மிகவும் அவதிப்பட்டனர்.
பின்னர், அப்போதைய ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த வீரராகவாச்சாரி 1954ஆம் ஆண்டு சென்னை மெரினாவில் நடந்த விழாவில், அப்போதைய பிரதமர் நேருவிடம் இருந்து விருதும், ஆயிரம் ரூபாய் சன்மானமும் பெற்றார். அந்த சன்மானத் தொகையை கொண்டும், தனது சொத்தின் ஒரு பகுதியை விற்றும் இப்பகுதி கிராம மக்களுக்கு மருத்துவமனை கட்டினார். அதனை சீன பிரதமர் சூ என்லாய் திறந்து வைக்க வேண்டுமென்று அலுவலர்கள் பலர் வீரராகவாச்சாரியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
அதனை தொடர்ந்து சென்னை வந்த சீன பிரதமர் சூ என்லாயிடம் வீரராகவாச்சாரி கேட்டுக் கொண்டதற்கிணங்க 3 அறைகள் கொண்ட பிரசவ ஆஸ்பத்திரியை, 1956ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி திறந்து வைத்தார். கடந்த 63 ஆண்டுகளில் 6 லட்சம் துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த மருத்துவமனை மட்டும் 'சீனாக்காரன் மருத்துவமனை' என்று அழைக்கப்பட்டது. தற்போது அந்த மருத்துவமனை உலர்ந்த நிலையில் இருந்ததால் அதனை புதுப்பித்து கட்டியுள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: சீனத் தலைவர்களும்... சென்னை பயணங்களும்...!