தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி, தங்கும் விடுதிகள் ஒவ்வொரு ஆண்டும் சுகாதாரத் துறை நிர்வாகத்திடம் சுகாதாரச் சான்றிதழ் பெற வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன் தொடர்பாக சுகாதாரத் துறையினர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிலுள்ள உணவருந்தும் இடம், கழிப்பறை, குடிநீர்த் தொட்டி உள்ளிட்ட கட்டமைப்புகளை ஆய்வுசெய்வதோடு தீயணைப்பு நிலைய சான்று, கட்டடத்தின் உறுதித்தன்மை சான்றை ஆய்வுசெய்து பின்னர் சுகாதாரச் சான்றிதழை வழங்குவார்.
மேலும், இந்தச் சுகாதாரச் சான்றிதழ் வழங்க விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன. போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிறுவனங்கள் இடைத்தரகர்கள் வாயிலாக கையூட்டு கொடுத்துச் சான்றிதழ் பெறுகின்றனர். அவ்வாறு குறுக்கு வழியில் சான்றிதழ் பெற இடைத்தரகர்கள் உதவியுடன் அலுவலர்களிடம் லஞ்சம் கொடுக்கப்பட்டு சுகாதாரச் சான்றிதழ் பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், பிற நிறுவனங்களுக்கு சுகாதாரச் சான்றிதழ் வழங்க கையூட்டு வாங்குவதாக வந்த புகாரைத் தொடர்ந்து காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் இயங்கிவரும் சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர், நேற்று (அக்டோபர் 18) திடீர் சோதனை மேற்கொண்டனர்.
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
இந்தச் சோதனையில் சுகாதாரத் துறை துணை இயக்குநர் பழனியிடமிருந்து கணக்கில் வராத ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 910 ரூபாய் ரொக்கப்பணமும், ஸ்ரீபெரும்புதூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளரான ஸ்ரீனிவாசனிடம் கணக்கில் வராத 26 ஆயிரத்து 490 ரூபாய், காஞ்சிபுரம் வட்டார சுகாதார அலுவலரான இளங்கோவிடமிருந்து கணக்கில் வராத எட்டாயிரத்து 900 ரூபாய் என மொத்தம் இரண்டு லட்சத்து இரண்டாயிரத்து 300 ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.
மேலும் பறிமுதல்செய்யப்பட்ட இந்தப் பணம் தொடர்பாக எந்த ஒரு ஆவணமும் இல்லாததால் சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் பழனி, இதர ஊழியர்களிடமும் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ஊருணியில் குளித்த பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறிப்பு - 2 மணி நேரத்தில் குற்றவாளியைப்பிடித்த காவல் துறை