காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வளர்புரம் நெடுஞ்சாலையில் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு சாலையோரமாக நின்றுகொண்டிருந்தன.
அப்போது மன்னூர் கூட்டுச் சாலையிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கண்டெய்னர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்றிருந்த மாடுகள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 மாடுகள் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தன.
இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் சாலையில் உயிரிழந்து கிடந்த மாடுகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர்செய்தனர்.
மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற லாரி ஓட்டுநரைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் கைது - லோடு ஆட்டோ பறிமுதல்!