காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஏப்ரல் 4) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தியிடம் நேரடியாகப் புகார் மனு அளித்தனர்.
இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் கூட்டத்தில் கலந்து கொண்டு புகார் மனு அளித்தார். அதில், 'எனக்கு ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் கிராமத்தில் 10 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலம் உள்ளது. தற்போது வரை அரசுக்கு முறையாக வரிகட்டி வருகிறேன். என் நிலத்தில் 800-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் உள்ளன. இந்நிலையில் என் நிலத்திற்கு அருகில் பல ஆண்டுகளாக கல்குவாரி அரவை நிலையம் செயல்பட்டு வருகிறது.
அதிலிருந்து வெளியேறும் கல் துகள்களால் என் நிலம் மாசடைந்துவிட்டது. விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் செயல்படும் கல்குவாரி அரவை நிலையத்தை தடை செய்ய வேண்டும். என் நிலத்திற்கு ரூ.7 கோடி நஷ்டஈடு பெற்றுத்தர வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
மேலும் அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளும் இதனால் பாதிப்படைகிறது. ஆகவே, சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மன்சூர் அலிகான் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி