கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே ரெட்டியார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ் (21). இவர் கள்ளக்குறிச்சியிலுள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். ரிஷிவந்தியம் அருகே மரூர் காட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (27). இவர்கள் இருவருக்கும் பகண்டை கூட்டு சாலையில் சந்திக்கும்போது நட்பு ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து கடந்த சுமார் ஒரு மாதத்திற்கு முன் மனோஜுக்கு இருசக்கர வாகனம் வேண்டும் என்று ஸ்டீபனிடம் கூறியுள்ளார். அதற்கு ஸ்டீபன் என்னிடம் பணம் கொடு, வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து மனோஜ் தனது தந்தையிடம் ரூ. 8 ஆயிரம் வாங்கி கொடுத்துள்ளார்.
கடந்த ஒரு மாத காலம் வரை வாகனத்தை வாங்கிக் கொடுக்காததால் மனோஜ், ஸ்டீபனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பணத்தை திருப்பி கொடுக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு ஸ்டீபன் திருக்கோவிலூர் அடுத்த மாடம்பூண்டி தைல மர காட்டிற்கு வர சொல்லி உள்ளார். இதையடுத்து காட்டிற்குள் சென்ற இருவரும் மது அருந்திவிட்டு ஒருவருக்கொருவர் பேசியுள்ளனர்.
பின் மது போதையிலிருந்த மனோஜை, கழுத்தை அழுத்தி கல்லால் அடித்து கொலை செய்த ஸ்டீபன், உடலை அங்கிருந்த மற்றொரு காட்டுப்பகுதியில் போட்டுள்ளார். இதைத்தொடர்ந்து நேரமாகயும் நேரமாகியும் மனோஜ் வீட்டிற்கு வராததால் அவரின் தந்தை, பகண்டை காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், சந்தேகத்தின் அடிப்படையில் ஸ்டீபனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மனோஜின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு, உடலை காட்டுக்குள் போட்டுவிட்டதாக ஸ்டீபன் கூறியுள்ளார்.
பின் ஸ்டீபனை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மனோஜின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் ஸ்டீபன் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.