கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள கனங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலச்சந்தர் (44). ஐ.டி.ஐ எலக்ட்ரீசியன் படிப்பை முடித்துவிட்டு எலக்ட்ரீசியன் வேலையை செய்துவந்தார். கடந்த 16 ஆண்டுகளாக துபாய் அடுத்துள்ள அபுதாபியில் இயங்கிவரும் அல் குட்ரா பெசிலிட்டிஸ் எனும் தனியார் தொழிலாளர் ஒப்பந்த நிறுவனத்தில் கட்டுமானத் துறையில் எலக்ட்ரீசியன் பணி செய்துவருகிறார்.
இவருக்கு அரபி, ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் தெரியும். நீண்ட அனுபவமும், தொழிலில் நேர்மையாகவும் இருந்த பாலச்சந்தரை அந்த நிறுவனம் தங்களது நிறுவனத்தில் இந்தியாவிலிருந்து வந்து பணிபுரியும் பலமொழிப் பேசும் தொழிலாளர்களுக்கு மேற்பார்வையாளராக பதவி உயர்வு அளித்து பணி செய்து வந்தார். மேலும், அந்நிறுவனம் முறையான ஊதியத்தையும் மரியாதையையும் வழங்கியதால் பாலச்சந்தரும் தொடர்ந்து அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 7ஆண்டுகளுக்கு முன் அவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த நந்தினி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் அன்றாடம் தனது பணியை முடித்து விட்டு அறைக்கு திரும்பியவுடன் நாள்தோறும் தனது மனைவியிடமும் பிள்ளைகளிடமும் கைப்பேசியின் வாயிலாக பேசிவிட்டு உறங்குவதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில், பாலச்சந்தர் வேலைபார்த்த நிறுவனம் கடந்த 6 மாத காலமாக முறையாக ஊதியம் வழங்கவில்லை, மேலும் தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஒப்பந்த ஊழியத்தில் சக ஊழியர்களுடன் பணி செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளதாக வேதனையோடு அவரது மனைவி நந்தினியிடம் கூறியுள்ளார்.
முறையான பயிற்சியும், பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட கூறியதால் மனவருத்தத்தில் இருந்தாலும் மற்ற தொழிலாளர்களோடு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், தூய்மைப் பணிக்கு தேவையான பொருள்களையும் தனது சொந்த பணத்திலேயே வாங்கி பணிபுரிந்து வந்ததாகவும் தனது மனைவியிடம் கடந்த சிலநாள்களுக்கு முன் கூறி வருத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இரு வாரங்களுக்கு முன்பு அவருருடன் சேர்த்து பணியில் ஈடுபட்டிருந்த சிலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றவர்களிடம் பாரசிட்டமால் மாத்திரைகளை எடுத்து கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள், அந்நாட்டின் குடிமக்களுக்கே மருத்துவம் பார்க்க போதிய வசதியின்றி அவதிப்படுவதாகக் கூறி மருத்துவர்கள் அனுப்பிவிட்டிருக்கின்றனர். அதனால் பாலச்சந்தரின் கீழ் பணியாற்றி வந்தவர்கள் அவரால் இந்த நிலை வந்துவிட்டது எனக்கூறி அவரை அவதூறாக பேசியுள்ளனர்.
கடந்த 3ஆம் தேதி இரவு தனக்கு அச்சமாக இருப்பதாகக் கூறிய அவர் தனக்கு தன் நிறுவனத்திலிருந்து ஊதியம், கரோனா தடுப்பு பணிகளுக்காக பொருள்கள் வாங்கிய வகையில் 15 லட்சம் ரூபாய்க்கு மேல் நிலுவை உள்ளதாகவும், மேலும் அந்நிறுவனத்தின் மேலாளருக்கு பல லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளதாகவும் இது தொடர்பாக அல் குட்ரா பெசிலிட்டிஸ் நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் குரூப்பில பதிவிட்டதால் அந்நிறுவனம் அவரை அச்சுறுத்துவதாக கூறியுள்ளார். இதனைதொடர்ந்து மறுநாள் அவரது குடும்பத்தினரிடம் பேசிய பாலச்சந்தர், பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக்கொள் என வாட்ஸ்ஆப்பில் பதிவிட்டுள்ளார்.
ஏப்ரல் 6ஆம் தேதிக்கு பிறகு கைப்பேசி அழைப்பு வராததால் அச்சமுற்ற அவரது குடும்பத்தினர், அவரது அலைபேசிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இருந்தும் அவரை தொடர்புகொள்ள முடியாததால் பதறிப் போன அவரது மனைவியும் குடும்பத்தினரும் வாட்ஸ்ஆப் மூலம் நிறுவனத்தின் உரிமையாளரிடம் தகவல் கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த அந்நிறுவனத்தினர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், கரோனா தொற்றுநோய் ஏற்பட்ட விரக்தியில் அவரது அறையிலேயே தற்கொலை செய்து கொண்டதாகவும் முன்னுக்குபின் முரணான தகவல்களை கூறியுள்ளனர்.
இது தொடர்பாக பேசிய உயரிழந்தவரின் மனைவி நந்தினி, “எனது கணவரின் சாவில் சந்தேகம் உள்ளது, மத்திய - மாநில அரசுகள் அந்நாட்டு அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு அவரது மரணத்தில் உள்ள மர்மம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர அரசுத் தரப்பில் உதவ வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க : மனைவியைப் பிரிந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட பள்ளி ஆசிரியர்!