கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை கீழாத்துக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ்(35). அவருக்கும் மட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்த புஷ்பா(29) என்பவருக்கும் திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் தேவராஜ்-புஷ்பா தம்பதி குழந்தைகள் இருவரையும் புஷ்பாவின் தாய் வீட்டில் விட்டுவிட்டு கர்நாடக மாநிலம் பாலேனூரில் கூலி வேலைக்கு சென்றனர்.
அப்போது புஷ்பாவிற்கும் சேலம் மாவட்டம் கருமந்துறை கீரைகடை கிராமத்திலிருந்து கூலி வேலைக்காக வந்த மணி என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் திருமணத்தை தாண்டிய உறவாக மாறியுள்ளது. அதனையறிந்த தேவராஜ் இருவரையும் கண்டித்துள்ளார்.
அதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தம்பதி இருவரும் கள்ளக்குறிச்சிக்கு வந்துவிட்டனர். தேவராஜனுக்கு வாகனம் ஒட்டத் தெரியும் என்பதால் அடிக்கடி லாரி ஓட்டும் வேலைக்காக சென்று விடுவார். அதனைப் பயன்படுத்திக் கொண்ட புஷ்பா, மணியை வீட்டிற்கு அழைத்து திருமணத்தை தாண்டிய உறவில் ஈடுபட்டுள்ளார்.
இந்த விவகாரம் தேவராஜூக்கு தெரியவர இருவரையும் கடுமையாக கண்டித்துள்ளார். அதில் ஆந்திரமடைந்த இருவரும் தேவராஜை கொலை செய்ய திட்டமிட்டனர். ஜூலை 2ஆம் தேதி புஷ்பா மணியை வீட்டிற்கு அழைத்துள்ளார். மணியும் சேலத்தைச் சேர்ந்த தனது மைத்துனர் சுரேஷ் என்பவரையும் அழைத்துக்கொண்டு சென்றார்.
அங்கு மூவரும் சேர்ந்து உறங்கிகொண்டிருந்த தேவராஜை துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். அதன்பின் அவரது உடலை மணியும், சுரேசும் தனது இருசக்கர வாகனத்தில் எடுத்துகொண்டு தருமபுரி வனப்பகுதி கோட்டப்பட்டி அருகே உள்ள 20 அடி பள்ளத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
அதன்பிறகு ஜூலை 7ஆம் தேதி அவரது உடலை கல்வராயன் மலை மேல் நிலவூர் என்ற கிராம நிர்வாக அலுவலர் வேணுகோபால் பார்த்து கரியாலூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றினர். உடல் மிகவும் அழுகிய நிலையிலிருந்ததால் அங்கேயே உடற்கூறாய்வு செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.
அதையடுத்து அவரது மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். சந்தேகமடைந்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
ஆனால் மணியை காட்டிக்கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அதையடுத்து அவரது செல்போன் எண்ணை வைத்து மணியை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சுரேஷ் என்பவருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் சுரேஷ் தேடப்பட்டுவருகிறார்.
இதையும் படிங்க: கோவையில் பயங்கரம்: காதலிக்க மறுத்த பெண் கொலை!