கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க உரை பொதுக்கூட்டம் மாவட்டச் செயலாளர் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்ளும்போது கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் திருக்குறளையும் அவ்வையார் பாடலையும் பாடுவது பழனிக்குப் பஞ்சாமிர்த கொடுப்பதும் போலவும், திருப்பதிக்கே லட்டு கொடுப்பது போலவும் தமிழ்நாட்டுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதுபோல் இருக்கிறது.
பழங்கால மொழியான தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளாதது வருத்தமளிக்கிறது எனக் கூறிவரும் பிரதமர் மோடி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியில் கடிதம் அனுப்புவது ஏன்? என்று தெரியவில்லை" எனக்கூறினார்.
தொடர்ந்து பேசிய கோபாலகிருஷ்ணன், "வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுப்பது தொடர்பாக யாராவது எதிர்ப்புத் தெரிவித்தார்களா, ஏன் இந்தச் சட்டம் அவசர அவசரமாக இயற்றப்பட்டதென்றால், தேர்தலுக்கு ஓட்டு வாங்குவது மட்டுமே குறிக்கோளாக வைத்து கபட நாடகம் ஆடி இந்தச் சட்டம் இயற்றப்பட்டது" என்று கூறினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் வெங்கட்ராமன் ஆனந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் வீட்டில் கொள்ளை!