கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் சிவனார்தாங்கல் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார்.
கடந்த 15 ஆண்டுகளாக ஓவியம் வரைவதில் மிகுந்த ஈடுபாடுடைய இவர், மறைந்த குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் உருவப்படத்தை நாக்கு, தாடி, மூக்கால் வரைந்து அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி பல தேசத்தலைவர்களின் உருவங்களை மணல் சிற்பங்களாலும், கயிற்றில் தலைகீழாக தொங்கியபடியும் வரைந்துள்ளார்.
இவரது திறமையை அங்கீகரிக்கும் பொருட்டு இலங்கையில் உள்ள 'தி அமெரிக்கன் பிசினஸ் யுனிவர்சிட்டி' இவருக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தாக்குதலிலிருந்து தற்காத்துக்கொள்ள கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் என்பதை வலியுறுத்தியும் 'கொரோனாவை ஒழிப்போம் WASH HAND' என்ற வாசகத்தைக் கைகளால் வரைந்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார். இவரின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ்: மகாராஷ்டிரா மாநிலத்தில் முதியவர் உயிரிழப்பு