கள்ளக்குறிச்சி: மணலூர்பேட்டை அருகே உள்ள மேலந்தல் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் கரும்பு வெட்டும் காலம் முடிந்ததும் கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு கறி விருந்து வைப்பது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் கரும்பு விளைச்சல் அதிகரித்ததால் கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு கறி விருந்து வைக்கப்பட்டது. இந்தக் கறி விருந்துக்கு கரும்பு வெட்டும் மேஸ்திரி ராஜா என்பவர், மூங்கில்துறைப்பட்டு சென்று கோழி கறி வாங்கி வந்துள்ளார்.
அதன் பிறகு மேலந்தல் கிராமத்தில் உள்ள முனியப்பன் சுவாமிக்கு பொங்கலிட்டு கோழிக்கறியை படையலிட்டு பூஜை செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளர்களில் ஆண்கள் 30 பேர், பெண்கள் 28 பேர் என குழுவாக சேர்ந்து கோழிக்கறி விருந்தில் கலந்து கொண்டு சாப்பிட்டுள்ளனர். தொடர்ந்து கோழிக்கறி சாப்பிட்ட சில மணி நேரம் கழித்து சுமார் 40க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
அவர்கள் உடனடியாக மணலூர்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்டனர். இதனைக் கேள்விப்பட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் மேலந்தல் கிராமத்திற்கு நேரில் சென்று உடனடியாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். அதன் பின்னர் சுகாதாரத்துறையினர் அளித்த முதல் தகவல் அடிப்படையில் கறி விருந்து நடைபெற்ற இடத்தில் கிணறு ஒன்று உள்ளது.
அந்த கிணறு சுமார் மூன்று மாதங்களுக்கு மேலாக பயன்படாமல் இருந்து வந்ததாகவும் மேலும் அதில் இருந்து தண்ணீர் எடுத்து கறி விருந்துக்கு தண்ணீர் குடிப்பதற்கு பயன்படுத்தி உள்ளனர். இதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் கோழிக்கறியை ஆய்வு செய்து பின்னரே இந்த வாந்தி மயக்கம் எப்படி ஏற்பட்டது என்று தெரிவிக்க முடியும் என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
இதில் சிகிச்சை பெற்ற 10க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை அரசு பொது மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கிராமத்தில் கறி விருந்தில் கலந்து கொண்ட கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட இச்சம்பவத்தால் மேலந்தல் கிராமம் பரபரப்பாக காணப்பட்டது.
இதையும் படிங்க:ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கிடா விருந்து... 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு