விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியதாவது; கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி, கல்வராயன் மலையில் அமைந்துள்ள சுயமரியாதைச் சுடரொளி தந்தை பெரியார் நீர்வீழ்ச்சியில் அமைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகைகளில் தந்தை பெரியார் அவர்களின் பெயர் மீது சில விஷமிகள் காவி வண்ணத்தை பூசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு முழுவதும் சில நாட்களாக, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களை கருத்து ரீதியாகவோ, தத்துவங்கள் ரீதீயாகவோ எதிர்கொள்ள முடியாத கயவர்கள், யாருமற்ற நேரங்களில் காவி வண்ணத்தைத் தந்தை பெரியார் அவர்களின் சிலைகள் அல்லது பெயர்ப்பலகையின் மீது பூசி தங்களது கோழைத்தனத்தை வெளிக்காட்டுகின்றனர்.
தமிழ்நாட்டை சுயமரியாதை மண்ணாக்கிய தந்தை பெரியார் அவர்களை இதுபோன்ற செயல்களால் இழிவுபடுத்திவிடலாம் என எண்ணும் மனநோயாளின் மீது இந்த அரசும், காவல்துறையும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிகவும் ஆபத்தானது.
இந்த அதிமுக அரசாலும், காவல்துறையாலும் நம்மை எதுவும் செய்துவிட முடியாது எனும் நினைப்பே இதுபோன்ற செயல்கள் தமிழ்நாட்டில் தொடந்து நடைபெற காரணமாக உள்ளது. உடனடியாக அரசும், காவல்துறையும் இதுபோன்ற கயமை செயல்களை செய்யும் கயவர்களை கைது செய்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்காவிடில், எங்களது திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனைகள், ஒப்புதல் பெற்று அதிமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.