கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே ஆலத்தூர் என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் அய்யம்மாள் என்ற தம்பதியினருக்கு பிரியதர்ஷினி என்ற மகளும், தனுஷ் (16) என்ற பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மகனும் இருந்துள்ளனர்.
தனுஷ் நேற்று (டிச. 12) தனது வீட்டின் அருகேவுள்ள தங்களுக்குச் சொந்தமான விவசாய கிணற்றில், தனது சகோதரி பிரியதர்ஷினி, பக்கத்து வீட்டைச் சேர்ந்த மேலும் இரண்டு பேர் என நான்கு பேர் சேர்ந்து கிணற்றில் நீச்சல் பழகியுள்ளனர். அப்போது தனுஷிற்கு அவனது இடுப்பில் சேலையைக் கட்டி அவரது சகோதரி உள்ளிட்ட மூன்று பேர் நீச்சல் பழகித் தந்துள்ளனர்.
நீச்சல் பழகிக் கொண்டிருந்தபோது, தனுஷ் தனது இடுப்பில் கட்டப்பட்டிருந்த சேலை துணியை அவிழ்த்துவிடுமாறும், தானே நீச்சல் அடித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். இதைக் கேட்ட உடன் இருந்தவர்கள் தனுஷ் உடலில் கட்டப்பட்டிருந்த சேலைத் துணியை அவிழ்த்துவிட்டுள்ளனர். இதன்பிறகு தனுஷ் பாதுகாப்பு இல்லாமல் நீரில் நீச்சல் அடிக்க முற்பட்டபோது, சற்றும் எதிர்பாராத நேரத்தில் நீருக்குள் மூழ்கியுள்ளார்.
இதைக் கண்ட உடன் இருந்தவர்கள் கூச்சல் போட்டு குடும்பத்தாருக்குத் தெரியப்படுத்தி பிறகு, உடனடியாக கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்களுக்குத் தகவல் தரப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து கடும் சிரத்தை மேற்கொண்டு தனுஷை மீட்கப் போராடினார்கள்.
கிணற்றில் நீர் முழுமையாக இருந்ததால் கிணற்றின் ஆழம் சுமார் 70 அடி என்பதாலும் உடனடியாக தனுஷை மீட்க முடியவில்லை. சுமார் 4 மணி நேரம் கழித்த பிறகே தனுஷ் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.
இதையும் படிங்க: உத்திரமேரூரில் பழங்கால கோயிலில் 1 கிலோ தங்கப் புதையல் கண்டெடுப்பு!