கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் செட்டித்தாங்கள் அருகே கடந்த மாதம் 23 ஆம் தேதியன்று இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சத்யா என்ற பெண்ணை, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர் அணிந்திருந்த 9 கிராம் தங்க செயினைப் பறித்துச் சென்றார்.
இது குறித்து திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் சத்யா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், திருக்கோவிலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கங்காதரன் மேற்பார்வையில், திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் பாபு, உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன், குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டியன், குற்றப்பிரிவு தலைமை காவலர்கள் வீரப்பன், நரசிம்மஜோதி உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையனைத் தேடி வந்தனர்.
இருபத்தி ஆறு நாள்கள் தனிப்படை காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர சோதனையில் கொள்ளையன் விழுப்புரத்திலிருந்து பல்சர் வாகனத்தில் வருவதும், விழுப்புரத்தில் இருந்து முகையூர் வரை முகமுடி அணியாமலும், திருக்கோவிலூர் அருகே வரும்போது மங்கி கேப் அணிந்தும், இருசக்கர வாகனத்தில் முன் பக்கம் மட்டுமே பதிவு எண் வைத்துக்கொண்டும் சுற்றி வருவதை கண்டறிந்தனர்.
கொள்ளையனை கண்டறிந்த காவல் துறை
இதனையடுத்து சம்பவம் நடந்த இடம் அதனை சுற்றியுள்ள இடம் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களை தனிப்படை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். இதையடுத்து அந்த கொள்ளையன் புதுச்சேரியை அடுத்த தனத்துமேடு பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் விஜி (24) எனத் தெரியவந்தது. தற்சமயம் விழுப்புரம் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது.
மேலும் அவர் குறித்து விசாரணையை தீவிரப்படுத்திய காவல் துறையினர், குறிப்பிட்ட அந்த நபர் திருவண்ணாமலை , வேலூர், திருச்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் இதே போன்று இருசக்கர வாகனத்தில் மங்கி கேப் அணிந்து சென்று செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
கொள்ளையன் கைது
இந்நிலையில், செஞ்சியில் தனது காதலியை கொலை செய்த வழக்கில் விசாரணை கைதியாக அவ்வபோது விழுப்புரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி வருவதையும் தனிப்படை காவல் துறையினர் கண்டறிந்தனர்.
இதனை அடுத்து நேற்றைய முன்தினம் (அக்.19) விழுப்புரம் நீதிமன்றத்திற்குச் சென்றுவிட்டு வெளியே வரும்போது அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், குறிப்பிட்ட அந்த தேதியில் தான் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவரிடம் இருந்து 21 கிராம் தங்கச் செயின், 9 கிராம் உருக்கிய நிலையில் உள்ள தங்கம், குற்ற சம்பவங்களில் ஈடுபடும்போது பாதுகாப்பிற்காக வைத்திருந்த கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் 10 சவரன் நகை பறிப்பு