தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (ஏப் 6) காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெற்றது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆர்வமாக வாக்களித்தனர்.
மாலை 7 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 71.79 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இளம் வாக்காளர்களும் அதிக அளவில் ஆர்வமுடன் தங்களது முதல் வாக்குகளைப் பதிவுசெய்தனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குச் சீல்வைக்கும் பணி நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குச் சீல்வைக்கப்பட்டு கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.