கள்ளக்குறிச்சி: எரவார் கிராமத்தை சேர்ந்த விவசாயியின் 18 வயது மகள், கள்ளக்குறிச்சி மாவட்டம் மேலூர் அரசு மாதிரி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்றுள்ளார். இந்த நிலையில் அரசு பொதுத் தேர்வில் 494 மதிப்பெண்கள் எடுத்த மாணவி மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், நடப்பு கல்வியாண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்றுள்ளார்.
ஆனால் அந்த தேர்வில் மாணவி 250 மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவம் படிக்க போதிய மதிப்பெண்கள் பெறாத காரணத்தினால், தனது கனவு நிறைவேறவில்லை என மாணவி மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த அக்டோபர் 23ஆம் தேதி மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் வயிற்று வலியால் துடித்து வந்த மாணவி, அது தொடர்பாக தகவலை பெற்றோரிடம் கூறாமல் மறைத்து வந்ததாக கூறுப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வயிற்று வலி அதிகமான காரணத்தால், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாணவியை சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.
அப்போது தான் மாணவி தான் தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு உடல் நிலை மோசமானதாக கூறப்படுகிறது. வேதனையில் துடித்த மாணவியை அடுத்தகட்ட சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் மாணவியின் பெற்றோர் அனுமதித்து உள்ளனர்.
ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (அக். 30) அதிகாலை மாணவி உயிரிழந்துள்ளார். தற்கொலைக்கு முயற்சி செய்து கடந்த ஒரு வார காலமாக பாதிக்கப்பட்ட மாணவி, உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளாத காரணத்தால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
தற்போது நீட் தேர்வால் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவியின் சடலம் உடற்கூராய்விற்காக சேலம் மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மாணவியின் தற்கொலை சம்பவம் குறித்து சின்னசேலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.