கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை மேலந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபானி. இவரது வீட்டில் கடந்த 16ஆம் தேதி திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து அவர் மணலூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின்படி, திருக்கோவிலூர் டிஎஸ்பி கங்காதரன் மேற்பார்வையில் ஆய்வாளர் பாபு தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு திருட்டு கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.
காவல் துறையிடம் சிக்கிய திருடன்
இந்நிலையில் இன்று (ஜூலை 21) திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டி கூட்ரோட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனால், அவர் மீது சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் வடகரைதாயனூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் என்பதும் சில தினங்களுக்கு முன்பு மேலந்தல் கிராமத்தில் நகைகள் திருடியதும் தெரியவந்தது.
குற்றவாளிக்கு சிறை
மேலும், இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 100 நாள் வேலைக்குச் செல்லும் பெண்களின் வீடுகளை குறிவைத்து இவர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. விசாரணையில், இவர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களிலுள்ள கிராம பகுதிகளில் அமைந்துள்ள 10 வீடுகளில் தனது கைவரிசையை காட்டியிருப்பதாக ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து 75 சவரன் தங்க நகைகள், 250 கிராம் வெள்ளி நகைகள், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், 2 கார்கள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர்,பின்னர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கோபிசெட்டிப்பாளையம் அருகே கால்நடைத் திருட்டில் ஈடுபட்டவர் கைது!