கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட தெருக்கூத்து கலைஞர்கள் சார்பாக, மாவட்ட வருவாய் அலுவலர் விஜய் பாபுவிடம் மனு அளிக்கப்பட்டது. அவர்கள் அளித்த மனுவில், “தமிழ்நாட்டில் பரவிவரும் கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட பல்வேறு தொழில்களில் ஒன்று தெருக்கூத்து கலைத்தொழில்.
இந்நிலையில் தற்போது சில நாள்களாக கரோனா கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டு மீண்டும் தெருக்கூத்து கலைகளில் ஈடுபட உள்ள நிலையில், மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கூத்து கலைஞர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
அதுமட்டுமின்றி தெருக்கூத்து கலைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், நாங்கள் உயிர் வாழ இயலாத சூழ்நிலையில் தள்ளப்படுவோம். எனவே இது குறித்து அரசு பரிசீலித்து தெருக்கூத்து கலை நிகழ்ச்சிகளை நடத்தவும், தகுந்த இடைவெளி, முகக்கவசங்கள் அணிதல், நூற்றுக்கும் குறைவான நபர்கள் உள்ளிட்ட கட்டுப்பாடுகளோடு நிகழ்ச்சியை நடத்திட, ஏதுவாக அமையும் வகையில் உத்தரவிட்ட வேண்டு தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த தெருக்கூத்துக் கலைஞர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தெருக்கூத்து நிகழ்ச்சிகளை நடத்தி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வருவாய்த்துறை அலுவலர் இதுகுறித்து அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு? சத்ய பிரத சாகு சூசகம்