கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே உள்ள குரால் கிராம காட்டுக்கொட்டகை பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள பொதுப் பாதையில் 135 மீட்டர் அளவிற்கு உள்ள பாதையை 12 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள மெய்யழகன்-செல்வி தம்பதிக்கு வருவாய்த் துறையினர் நில ஒப்படை செய்து கொடுத்துள்ளனர்.
அதனால், மெய்யழகன் செல்வி தம்பதியினர் தங்கள் நிலத்தின் அருகே உள்ள பாதையை யாரும் பயன்படுத்த அனுமதிக்காமல் தடுத்து வந்தனர். இது சம்பந்தமாக குரால் கிராம காட்டுக்கொட்டகை மக்கள் வருவாய்த் துறையில் முறையிட்டு பொதுப் பாதையை மீட்டெடுக்க முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை. மேலும், இந்தப் பாதை பிரச்னை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
பாதை கேட்டு போராடியதில் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்துவிட, அந்த பாதை வழியாக அவரது உடலை எடுத்துச்செல்ல மெய்யழகன் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இறந்தவரின் உடலை சொந்த இடத்திலேயே அடக்கம் செய்த பொதுமக்கள், பாதையை மீட்டெடுக்க கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு சார் ஆட்சியரிடம் இது குறித்து முறையிட்டனர்.
பிரச்னைக்குரிய இரு தரப்பினர், சின்ன சேலம் வட்டாட்சியர் வளர்மதி, குறுவட்ட வருவாய் ஆய்வாளர் காந்திமதி, கிராம நிர்வாக அலுவலர் ரங்கசாமி ஆகியோரிடம் சார் ஆட்சியர் விசாரணை நடத்தினார்.
அதில், 30 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பாதை வருவாய்த் துறையினரால் தவறுதலாக நில ஒப்படை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நில ஒப்படை வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து பொதுமக்களுக்கு பாதை வசதி ஏற்படுத்தி தர சின்னசேலம் வட்டாட்சியருக்கு சார் ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 'அதிமுக கரைவேட்டி கட்டாதவர்கள் கரூர் காவல்துறையினர்' - செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு