கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மோட்டாம்பட்டி அடுத்த கூடலுார் என்ற மலை கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியவாசிய பொருள்கள் வாங்குவதற்கு கூட கடைகள் கிடையாது. இதுவரை இக்கிராமத்தில் பேருந்து வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.
இக்கிராம மக்கள் பொருள்கள் வாங்க வேண்டுமென்றால், 3 கி.மீ., துாரம் உள்ள மோட்டாம்பட்டிக்கு நடந்து அல்லது இருசக்கர வாகனத்தில் சென்று வாங்கிவரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மோட்டாம்பட்டிக்குச் செல்ல வேண்டும் என்றால் குரும்பலுார் ஆற்றைக் கடந்து தான் செல்ல வேண்டும். கோடை காலங்களில் ஆற்றில் தண்ணீர் செல்லாதபோது ஆற்றை எளிதாக கடந்து சென்று வருவர்.
இடுப்பளவு தண்ணீரில் நடந்து செல்லும் மாணவர்கள்:
ஆனால், மழைக் காலங்களில் கல்வராயன் மலையில் பெய்யும் மழை நீர் மணி நதியில் பெருக்கெடுத்து, குரும்பலுார் வழியாக செல்கிறது. அவ்வாறு மணி நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது, கூடலுாரில் இருந்து மோட்டாம்பட்டிக்குச் செல்லும் பள்ளி மாணவர்கள், முதியோர் என அனைவரும் இடுப்பளவு தண்ணீரில் நடந்து ஆற்றைக் கடந்துச் செல்கின்றனர்.
உடல் நிலை சரியில்லாதவர்கள், மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றால் கூட ஆற்று நீரில் இறங்கிதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. சில நேரங்களில் ஆற்றைக் கடக்கும்போது வெள்ளத்தில் பள்ளி மாணவர்கள் மூழ்கி, நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. அதுமட்டுமின்றி அதிகளவில் நதியில் ஓடும் தண்ணீர், குறையும் வரை இரண்டு, மூன்று நாள்களானாலும் கூடலுார் கிராம மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
மேம்பாலம் கட்டித்தர கிராம மக்கள் கோரிக்கை:
மோட்டாம்பட்டி - கூடலுார் ஆற்றில் மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும், மனு அனுப்பியும் உள்ளனர். ஆனால், இது வரை எவ்வித நடவடிக்கையும் அரசு தரப்பிலிருந்து எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுவரை, தரைப்பாலம் கூட அமைத்து தராததால் கிராம மக்கள் மாநகராட்சி அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, கூடலுார் கிராம மக்கள் சிரமமின்றி ஆற்றைக் கடந்துச் சென்று வர, மேம்பாலம் கட்டித்தர மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கையில் சிறை: மத்திய அமைச்சரிடம் கோரிக்கைவைத்த ஸ்டாலின்!