கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்து வரும் பொதுமக்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக சம்பளத் தொகை வழங்கவில்லை.
மேலும் தமிழ்நாடு அரசின் பசுமை வீடுகள் கட்டும் திட்டம் மற்றும் தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டவும், கழிப்பறை கட்டவும் அனுமதி வழங்கி ஐந்து ஆண்டுகள் ஆகியும், இதுவரை அவர்களுக்கு அதற்கு உரிய தொகை வழங்கவில்லை. இதனால் எடையூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இது குறித்து திருக்கோவிலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளித்தனர். அதன்பிறகும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் எடையூர் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றினை அளித்தனர். அதில், ”100 நாள் வேலைத் திட்டத்திற்கான சம்பளத் தொகையையும், பசுமை வீடு கட்டும் திட்டம், தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டத்திற்கு அனுமதி அளித்தும் தொகையை வழங்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, உரிய பயனாளிகளுக்கு தொகை உடனடியாக கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: உயிரிழந்த மகனின் உடலை தமிழ்நாடு கொண்டு வர முடியாமல் தவிக்கும் தந்தை!