கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் சடையன். இவரின் குலதெய்வ இடம் அரசு புறம்போக்கு பகுதியில் இருக்கிறது. இந்த இடத்தை துரூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பையன் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இது தொடர்பாக சின்னப்பையனுக்கும் சடையனுக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக தகராறு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், சின்னப்பையன் ஜேசிபி இயந்திரம் மூலமாக கோயில் நிலத்தை உழுதபோது, இது குறித்து தகவல் அறிந்த சடையன் சின்னபையனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சுமார் 70 வயது மதிக்கத்தக்க சடையனை சின்னப்பையன் சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார்.
மலைப்பகுதியில் யாரும் இல்லாத காரணத்தால் இந்த சம்பவம் குறித்து யாருக்கும் தெரியாமல் போய்விட்டது. இரவு நேரம் ஆகியும் சடையனை காணாத காரணத்தால் காட்டிற்குச் சென்று பார்த்தபோது அங்கு சடையன் சடலமாக கிடந்துள்ளார்.
இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக கரியாலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தத் தகராறில் சின்னப்பையனுக்கு நெஞ்சில் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.