தைப்பூசத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற தைப்பூச திருநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் 1000 ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் நிறுவனத் தலைவர் வேலூர் இப்ராஹிம் கலந்துகொண்டு பொதுமக்கள், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து வருகின்றனர். ஆனால் வேளாண் சட்டங்களுக்கான முன்வடிவை கொண்டு வந்ததே காங்கிரஸ், திமுகதான். பாரதிய ஜனதா கட்சி கொண்டுவரும் நல்ல திட்டங்களை எதிர்ப்பதே காங்கிரஸ், திமுகவின் வேலை.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேலை எடுப்பதும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கோயிலில் வலம் வருவதும் என அரசியல் களத்திற்காக நாடகம் நடத்திவருகின்றனர்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், டெல்லியில் விவசாயிகள் போர்வையில் நக்சலைட்டுகள் மற்றும் இந்த தேசத்திற்கு எதிரானவர்கள் வன்முறையில் ஈடுபட்டு காவலர்களை தாக்கியதாகவும் இவர்களை மத்திய பாஜக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:டெல்லி பேரணி... விவசாயிகள் மீது தடியடி: தலைநகரில் பதற்றம்