கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அம்மாவட்டக் காவல் துறையினருக்கு அவர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் உளுந்தூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் அகிலின் தலைமையில் தனிப்படைக் காவல் துறையினர் காட்டுநெமிலி கிராமத்தில் சோதனையிட்டபோது அந்தக் கிராமத்தைச் சேர்ந்த முத்தரசன் (வயது 55) என்பவர் வீட்டில் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த லாட்டரி சீட்டுகளையும், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.