மத்திய அரசு அறிவித்துள்ள முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் கடன் வழங்கக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த சேந்தநாடு இந்தியன் வங்கியின் முன் திரண்டனர். அப்போது அங்கே நிர்வாகத்தினர் கடன் கேட்டு வந்த பெண்களை வங்கிக்குள் விடாமல் தடுத்து நிறுத்தி வங்கியை மூடினர்.
இதனால் ஆவேசமடைந்த பெண்கள் உள்பட பொதுமக்கள் வங்கி நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 30 நிமிடத்திற்கு மேலாக வங்கி திறக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வங்கியின் கேட்டை உடைத்து உள்ளே நுழைந்து, வங்கிக்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருநாவலூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் கடன் கேட்டு வந்த பெண்களுக்கு முத்ரா திட்டத்தில் கடன் கொடுக்க வங்கி நிர்வாகம் தரப்பில் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர். பொதுமக்களின் இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: 'சாப்பாடும் இல்லை... கழிவறையும் இல்லை': தனிமைப்படுத்துதல் மையத்தில் போராட்டத்தில் குதித்த கரோனா நோயாளிகள்!