கள்ளக்குறிச்சி மாவட்டம், வ.உ.சி நகரைச் சேர்ந்த வெங்கடேசன் பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமே படித்திருக்கிறார். சிறுவயது முதலே விநாயகர் மீது அதீத பற்று கொண்ட இவர், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் உருவம் வரைந்து அசத்தி வருகிறார்.
2012ஆம் ஆண்டு முட்டை ஓட்டில் தொடங்கிய வெங்கடேசனின் இந்தக் கலைத்திறன், 2013ஆம் ஆண்டில் நவதானியத்திலும், 2014ஆம் ஆண்டில் தேங்காய் ஓட்டிலும், 2015இல் 2,121 தீக்குச்சிகளைக் சேர்த்தும் விநாயகர் உருவத்தை வடிவமைத்து அப்பகுதி மக்களைக் கவர்ந்து வருகிறது.
மேலும், 2016ஆம் ஆண்டு சில்வர் ஸ்பூனிலும், 2017 மைக்கா வெல்வெட்டிலும், 2018 இரு சக்கர உதிரி பாகங்களாலும், 2019 காய்கறி வகைகளாலும், 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு கலை இசை பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாகவும் விநாயகரை வரைந்து தனது தனித் திறமையை நிரூபித்திருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் விநாயகர் சதுர்த்திக்கு அவர் உருவத்தை வடிவமைப்பதால் மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கிறது என்று நெகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார் வெங்கடேசன்.
கலைக்கு எதற்கு படிப்பறிவு எனும் கோட்பாட்டை அழுத்தமாக நிரூபித்துள்ளார் வெங்கடேசன். இவர் போன்ற கலைஞர்களின் திறமைகளை வெளி உலகிற்கு உணர்த்த, அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.