கள்ளக்குறிச்சி: முருக்கம்பாடி காலனியைச் சேர்ந்தவர் சரோஜா (50). இவருடைய மகள் மகாலட்சுமி (33). மகாலட்சுமிக்கு திருக்கோவிலூர் அடுத்த தேவிகாபுரத்தில் ஆட்டோ ஓட்டுநரான முருகன் என்பவருடன் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு இரண்டு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். மகாலட்சுமி திருமண பந்தத்தைத் தாண்டிய உறவு வைத்திருப்பதாகச் சந்தேகத்தில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் முருகனின் வீட்டிலிருந்து மகாலட்சுமி தனது சொந்த ஊரான முருக்கம்பாடியில் உள்ள தாயாரான சரோஜா வீட்டிற்கு வந்துள்ளார்.
குடிபோதையில் முருகன்
இந்நிலையில், குடிபோதையில் முருகன் தனது மாமியார் வீட்டிற்கு வந்து மகாலட்சுமி தன்னுடன் சேர்ந்து வாழும்படி வற்புறுத்தி தகராறு செய்துள்ளார். பின்னர் அவர்கள் முருகனைச் சமாதானப்படுத்தி அங்கேயே இரவு தங்கவைத்துள்ளனர். ஆனால் குடிபோதையில் முருகன் மனைவி அணிந்திருந்த நகையை கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடப்பாரையால் குத்திக்கொலை
ஆனால், நகை தர மறுக்கவே நள்ளிரவு ஒரு மணியளவில் மனைவி, மாமியாரை கடப்பாரையால் குத்தி படுகொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார். அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் மணலூர்பேட்டை காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
இந்தத் தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் நேரில் வந்து ஆய்வுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
பின்னர், இரு உடல்களையும் கைப்பற்றி திருவண்ணாமலை அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். தப்பியோடிய முருகனை வலைவீசித் தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சுட்டு வீழ்த்தப்பட்ட லஷ்கர் தளபதி உள்பட 3 பயங்கரவாதிகள்!