கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம், சின்னசேலம், தியாகதுருகம், கச்சிராயப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் பெரும்பாலும் பருத்தி பயிரிடுவார்கள்.
அந்த வகையில், ஆண்டுதோறும் இங்கு 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மானாவாரி பயிராகவும் பல்வேறு தனியார் நிறுவனங்களின் வீரிய ஒட்டுரக பருத்தி பயிர்களும் பயிரிடப்படுகின்றன.
இந்நிலையில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட கூடுதலாக பருவமழை பெய்ததாலும் இடைவிடாத மழையின் காரணமாகவும் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள வீரிய ஒட்டுரக பருத்தி செடிகள் மகரந்தச்சேர்க்கை பூக்களை சேகரிக்க முடியாததாலும் வயல்வெளிகளில் மழைநீர் தேங்கி நிற்பதாலும் வீரிய ஒட்டு ரக பருத்தி செடிகளில் உள்ள காய்கள் முளைத்தும், ஏறக்குறைய 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வீணாகி விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த விவசாயிகள் பிற மானாவாரி பருத்தி பயிர்களைப் போல் தனியார் கம்பெனிகளின் வாயிலாக பயிரிடப்பட்டுள்ள வீரிய ஓட்டு ரக பருத்திகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயிர் காப்பீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்க வீரிய ஒட்டுரக பருத்தி விதைகளை வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் ஆறு மாத கால பயிரான வீரிய ஒட்டு ரக பருத்தியை பயிர் செய்வதற்கு ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் செல்வதாகவும் ஆறு மாதம் இரவு பகல் பாராமல் கடுமையாக தாங்கள் உழைத்தும் வட்டிக்கு கடன் வாங்கி செய்த பயிருக்கு வட்டி கூட கட்ட முடியாமல் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க : Rain update: நவ.25ஆம் தேதி முதல் வடதமிழக பகுதிகளில் மழை அதிகரிக்கும் - புவியரசன்