கள்ளக்குறிச்சி: வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து, திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் சமயத்தில் அச்சுறுத்தவே இது போன்ற சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் ஜெகத்ரட்சகன் அஞ்ச மாட்டார் என பாசனத்திற்காக கோமுகி அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்கும் நிகழ்வின்போது அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது, கோமுகி அணை. இதன் மொத்த கொள்ளளவு 46 அடியாக உள்ளது. கல்வராயன் மலைப் பகுதியில் பெய்யும் மழைநீர் முழுவதும் கல்படை, பொட்டியம், மல்லிகைப்பாடி, பரங்கிநத்தம் ஆகிய ஆறுகளின் வழியாக இந்த அணைக்கு வருகிறது.
தற்போது இதன் நீர்மட்டம் 41 அடியை எட்டிய நிலையில், அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில், அமைச்சர் எ.வ.வேலு விவசாய பாசனத்திற்காக பழைய மற்றும் புதிய பாசன வாய்க்கால்கள் வாயிலாக தண்ணீரை நேற்று திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, மதகு வழியாகச் செல்லும் தண்ணீரை அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏக்கள் மலர் தூவி வரவேற்றனர். இதனால் பழைய பாசனப் பரப்பு மற்றும் புதிய பாசனப் பரப்பு ஆகியவை பாசன வசதி பெறும் வகையில், 22 நாட்களுக்குத் தண்ணீர் திறக்கப்படுகிறது. தண்ணீர் திறப்பின் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10,850 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, "ஜெகத்ரட்கன் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல, அவர் ஒரு தொழிலதிபர். அவருடைய வீடு மற்றும் அவர் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் வரும் நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை தேவையற்றது.
ஜெகத்ரட்சகன் எங்கும் ஓடி ஒளியக்கூடியவர் அல்ல. அந்த வகையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு இந்த சோதனைகளை நடத்தக் கூடாதா? வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களது சோதனையை மேற்கொள்வதில் தவறில்லை. ஆனால், எந்த காலத்தில் மேற்கொண்டு வருகிறார்கள் என்பதுதான் கேள்வி.
தேர்தல் சமயத்தில் அச்சுறுத்தவே இது போன்ற சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் ஜெகத்ரட்சகன் அஞ்ச மாட்டார். அடிபணியவும் மாட்டார். திமுக அரசு ஆட்சிக்கு வந்த கடந்த இரண்டு ஆண்டுகளில், மக்கள் நல்ல பலனை அனுபவித்து வருகிறார்கள் என்பதற்கு, அங்கீகாரம் அளிக்கும் வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்" என்றார்.