கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக மோகன்ராஜ் நேற்று(ஜன.4) பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாரந்தோறும் மக்கள் குறை தீர்ப்புக் கூட்டம் நடத்தி, அவர்களது புகார்கள் மீது காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சின்னசேலம் போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வாகன விபத்துகளை தவிர்க்கும் வகையில் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாவட்டத்தில் அமைந்துள்ள கல்வராயன்மலையில் சாராய விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால், அவர்களின் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் பண மோசடி உள்ளிட்டவை குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். கந்துவட்டி தொடர்பான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 6.20 கோடி வாக்காளர்கள்: இறுதி பட்டியலை வெளியிட்ட சாகு!