கள்ளக்குறிச்சி: மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்:
"தமிழ்நாடு அரசு கரோனா நோய்த்தொற்று அளவைக் குறைப்பதற்கும், பரவலைத் தடுப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக, என்னுடன், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, சுகாதாரத்துறையின் செயலர் ஆகியோர் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளை நேரடியாக சென்று பார்வையிட்டு வருகின்றோம்.
புதிய ஆக்ஸிஜன் படுக்கைகள்
இதில் பல்வேறு இடங்களில் புதிதாக ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய கரோனா படுக்கை அறைகள் திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு பகுதியில் 46 ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை அறைகளும், மற்றொரு பகுதியில் 30 ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை அறைகளும், இன்று (அதாவது நேற்று-ஜுன் 7) ஒரே நாளில் மட்டும் 76 படுக்கை அறைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
எண்ணிக்கை கூடுகிறது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை ஜுன் 6ஆம் தேதியன்று தொற்றால் பாதிக்கப்பட்டவர் 308 நபர்கள், குணமடைந்தவர்கள் 376 நபர்கள் பாதிக்கப்பட்டவர்களைக் காட்டிலும் குணமடைந்தவர்களின் அளவு கூடுதலாக இருக்கிறது. மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பெரிய அளவிலான எண்ணிக்கையிலானவர்கள் குணமடைந்து வருகிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
பொன்முடியின் யோசனை
அமைச்சர் பொன்முடி சிறப்பு மிகுந்த கருத்து ஒன்றைச் சொல்லியிருக்கிறார். கள்ளக்குறிச்சியில் ஏற்கெனவே கள்ளக்குறிச்சி மாவட்டம் என்று ஒன்று தனியாக அமைத்தவுடன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2006-11ஆம் ஆண்டில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என செயல் திட்டத்தை அறிவித்திருந்தார். அதன்படி மாவட்ட வாரியாக மருத்துவக் கல்லூரி தொடங்கி வந்தார்கள்.
அந்த அடிப்படையில், தற்போது கள்ளக்குறிச்சி என்ற மாவட்டம் உருவான பிறகு, அங்கு இருக்கும் ஒரு அரசு கலைக் கல்லூரியை மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்துவதற்கு கூடுதல் கட்டடங்களை கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்தாண்டே செயல்படும்
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான் அந்தப் பணிகள் முடிவடையும் நிலை என்றாலும்கூட பெரும்பகுதியிலான பணிகள் நிறைவடைந்துள்ள சூழ்நிலையில், இந்த ஆண்டே அந்த கல்லூரி செயல்பாட்டிற்கு வர இருக்கிறது.
ஒரு மாவட்டத்தின் தலைநகர் பகுதியில் ஒரு அரசு பொது மருத்துவமனை இருக்க வேண்டும் என்பதால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிறைய மக்கள் புழக்கம் இருக்கும் திருக்கோவிலூர் பகுதியில் ஒரு அரசு பொது மருத்துவமனையை அமைக்க வேண்டும்.
மாவட்ட மருத்துவமனையாக மாற்றம்
ஏற்கெனவே இருக்கும் தாலுகா மருத்துவமனையானது, மாவட்ட அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். இதுகுறித்து அமைச்சராகிய நானும், துறையின் செயலாளரும் முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்செல்வோம். உடனடியாக இந்த மருத்துவமனையை மாவட்ட அரசு பொது மருத்துவமனையாக மாற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவோம்.
இந்நிகழ்வில் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உதயசூரியன், புகழேந்தி, ஏஜே மணிகண்ணன், கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் பொன் கவுதம சிகாமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக திருக்கோவிலூர் திமுகவினர் சார்பாக 1000 பேருக்கு கரோனா நிவாரண பொருட்களை அமைச்சர் பொன்முடியும், அமைச்சர் மா.சுப்பிரமணியமும் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.