கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை முதல் சேலம் வரையிலான நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு கடந்த 2008-ம் ஆண்டு ரூ.941 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த பணிகள் நிறைவடைந்துள்ளதாக கடந்த 2013-ம் ஆண்டு ஆணையத்தின் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த சாலை பணியானது இதுவரையிலும் நிறைவு பெறவில்லை என தெரிகிறது.
ஆத்தூர், உடையார்பட்டி, வாழப்பாடி, சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள புறவழிச்சாலைகளில் நான்கு வழிச்சாலைகள் அமைக்கப்படாமல் இரு வழிச்சாலையாகவே உள்ளதாக கூறப்படுகிறது.
புறவழிச்சாலையில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்கள், பாலங்களில் இருவழியாக குறுகிய அளவில் வாகனங்கள் கடந்து செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளது என தெரிகிறது. இதனையொட்டி பெரிய கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
கணக்கெடுப்பின்படி கடந்த 11 ஆண்டுகளில் நடந்த வாகன விபத்துகளில் சுமார் 1,036-க்கும் அதிகமான உயிரிழப்புகள் இந்த சாலைகளில் ஏற்பட்டுள்ளன.
எனவே உளுந்தூர்பேட்டை முதல் சேலம் வரையிலான நான்கு வழிச்சாலை பணிகளை 377-வது விதியின்கீழ் துரிதப்படுத்த வேண்டும் என கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம் பொன்முடி வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: 'நம்ம ஸ்கூல்' திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்