கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்திலுள்ள பட்டாசு கடையில் நேற்று (அக்.26) மாலை எதிர்பாராத விதமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசுகள் அருகிலிருந்த பேக்கரி, ஹோட்டல் உள்ளிட்ட கடைகளில் வெடித்து சிதறியதால் அங்கிருந்த நான்கு சிலிண்டர்களும் வெடித்து.
இந்தத் தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்த நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று (அக்.27) காலை உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.
பட்டாசு கடை தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனை, சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு (அக்.26) முதலே தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விபத்து நடைபெற்ற பகுதியில் தடவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து வருகின்றனர். பயங்கர தீ விபத்து காரணமாக சங்கராபுரம் பகுதியில் நேற்று (அக்.26) மாலை முதலே மின் தடை ஏற்பட்டுள்ளது.
அதனை சரி செய்து மின்மாற்றிகளை மாற்றும் பணியில் மின்வாரிய அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து வருவாய்த்துறையினர், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், மின்வாரிய அலுவலர்கள் எனப் பலரும் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கட்டட இடிபாடுகளில் சிறுவன் ஒருவர் சிக்கி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் - மு.க.ஸ்டாலின்