கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே லாலாபேட்டையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த இளையராஜா என்பவர் மருந்தகம் நடத்திவந்தார். இந்நிலையில் லாலாபேட்டை கிராமத்தில் ஏழை எளிய மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் ஆய்வுமேற்கொண்டனர்.
அப்போது ஒரு வீட்டில் மூதாட்டி ஒருவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்ததைப் பார்த்த அலுவலர்கள் அவரிடம் எப்படி வீட்டிலேயே வைத்தியம் பார்க்கிறீர்கள் என்று விசாரித்துள்ளனர்.
அப்போது அருகில் மருந்தகம் வைத்து நடத்துபவர்தான் இப்பகுதி மக்களுக்கு வைத்தியம் பார்ப்பார் என்று கூறியுள்ளார். இதையடுத்து, கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர், வருவாய் அலுவலர் இது குறித்து விசாரணை மேற்கொள்ள ரிஷிவந்தியம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ஜெயபாலனுக்கு உத்தரவிட்டனர்.
அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார மருத்துவ அலுவலர் விசாரணை மேற்கொண்டதில் இளையராஜா எட்டாம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்துவந்தது தெரியவந்தது.
இது குறித்து ரிஷிவந்தியம் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயபாலன் பகண்டை கூட்டுரோடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் இளையராஜாவை கைதுசெய்து அவரின் மருந்தகத்திற்குச் சீல்வைத்தனர்.
எட்டாம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைதுசெய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.