புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் கவுதம் (41). இவர், தனது நண்பர்கள் ராஜேஸ்குமார், வினோத், பாலாஜி, பாரத், ராகுல், கணேஷ், ஏழுமலை ஆகிய எட்டு பேரும் இரண்டு கார்களில், நேற்று முன்தினம் (ஜூலை 28) கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அருகேயுள்ள சேராப்பட்டு மலைக்கிராமத்திற்கு சென்றனர்.
இந்நிலையில், சிறுகலூர் நீர்விழ்ச்சியை பார்க்க இரவு 9 மணியளவில் காரில் சென்றபோது, காரிலிருந்து இறங்கிய கெளதம் ஆற்றின் ஆழத்தை தெரிந்து கொள்ள ஓடும் ஆற்றில் இறங்கினார். கல்வராயன்மலையில் கடந்த இரண்டு நாள்களாக தொடர் மழை பெய்து வருவதால், ஆறு, ஓடைகளிலும், நீர்வீழ்ச்சிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சிறுகலூர் ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியபோது கவுதம் இறங்கியதால் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். கண் இமைக்கும் நேரத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கெளதமை, மீட்க அவரது நண்பர்கள் போராடி தோற்றனர். இரவு நேரம் என்பதால் காப்பாற்ற முடியாமல் தத்தளித்தனர். இதனையடுத்து, சங்கராபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரியலூர் உதவி காவல் ஆய்வாளர் துரைராஜ், ஊர்மக்களுடன் சேர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், சிறுகலூர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கெளதமின் உடல் கூடலூர் ஆற்றில் கரை ஒதுங்கியது. இறந்தவரின் உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டது. மேலும், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்வராயன் மலையும் நீடிக்கும் குற்றமும்
கல்வராயன்மலையில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் ஆறு, ஓடைகளிலும், நீர்வீழ்ச்சிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், மேகம், பெரியார், செருக்கலூர், எட்டியாறு போன்ற நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்காகவே பாண்டிச்சேரி, கடலூர் ஆகிய வெளிமாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் கார், வேன்களில் வந்து செல்கின்றனர்.
ஆனால் சிலர் மது அருந்திவிட்டு குளிக்கும்போது நீரின் சுழலில் சிக்கி இறக்கின்றனர். அதனால் நீர்வீழ்ச்சிகளில் காவல் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட வேண்டும் அதுமட்டுமன்றி வனத்துறையினர் சோதனைச்சாவடிகளில் வாகன சோதனையில் ஈடுபட வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பொதுவாக கள்ளக்குறிச்சியிலிருந்து கல்வராயன்மலைக்கு செல்ல இரண்டு வழிகள் உள்ளன.
கச்சிராயபாளையம் வழியாக பரிகம் செக்போஸ்ட்டை கடந்தும், சங்கராபுரம் வழியாக எல்.என்.பட்டி செக்போஸ்ட்டை கடந்தும் மலைக்கு செல்ல முடியும். இந்த இரண்டு செக்போஸ்டுகளிலும் வாகனங்களை சோதனை செய்வது கிடையாது. குறிப்பாக மலைக்கு செல்லும் வாகனங்களில் மதுபானங்கள் உள்ளதா என்பதை சோதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுமுடக்க காலத்தில் முறைப்படி இ- பாஸ் அனுமதி பெற்று சென்றார்களா?, இரண்டு மாவட்டத்தை கடந்து வந்தது எப்படி என பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: புதிய கல்விக் கொள்கை: தமிழ்நாடு அரசுக்கு தகவல் வரவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்!