தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவின் அடிப்படையில், சுகாதாரத் துறையினரும் காவல் துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலை அருகே உள்ள மாமனந்தல் என்ற இடத்தில் வாகனங்களில் முகக்கவசம் இன்றி பயணிப்பவர்களை தடுத்து நிறுத்தி கரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.