மின்சாரம் தாக்கி கட்டட தொழிலாளி உயிரிழப்பு! - kallakurichi district
கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் கிழக்கு வீதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் வேலை செய்துவந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கிழக்கு வீதியில் விஸ்வநாதன் என்பவர் சொந்தமாக குடியிருப்பு ஒன்றை கட்டி வருகிறார். இதில் ஆவியூர் பகுதியை சேர்ந்த தனபால் மகன் ஆறுமுகம் (40) (மேஸ்திரி) மற்றும் அம்மையப்பன் மகன் முருகன் (52) ஆகியோர் கட்டட வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், கட்டடத்தில் கட்டப்பட்ட சாரத்தை கழற்றும்போது எதிர்பாராதவிதமாக ஆறுமுகமும், முருகனும் கீழே விழுந்துள்ளனர். அப்போது இடையில் கீழே சென்று கொண்டிருந்த உயர் மின் கம்பியில் ஆறுமுகம் மாட்டிக்கொள்ள, முருகன் மேலிருந்து கீழே விழுந்தார்.
இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் உடனே இருவரையும் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே ஆறுமுகம் உயிரிழந்தார். தற்போது முருகன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து திருக்கோவிலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.