கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த ரெட்டியார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகன் மனோஜ் (21). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பிசிஏ முதலாமாண்டு படித்து வந்தார். இவருக்கும் மரூர் காட்டுக்கொட்டாய் கிராமத்தில் வசித்து வரும் டேனியல் மகன் ஸ்டீபன்ராஜ் (27) என்பவருக்கும் பகண்டை கூட்டு சாலையில் சந்திக்கும்போது நட்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டீபன் கார் ஓட்டுநராக உள்ளார்.
இந்நிலையில், மனோஜ் தனக்கு பைக் வாங்கித் தருமாறு ரூ.8 ஆயிரத்தை ஸ்டீபனிடம் கடந்த 2 மாதங்களுக்கு முன் கொடுத்தார். ஆனால், ஸ்டீபன் பைக் வாங்கித் தராமல், மனோஜை அலைகழித்துள்ளார். இதைப் பற்றி அறிந்த மனோஜின் பெற்றோர் பைக் வாங்க முடியாவிட்டால் பணத்தை வாங்கி கொண்டு வா என்று கூறினர். இதையடுத்து ஸ்டீபனை போனில் தொடர்பு கொண்ட மனோஜ், பைக் வாங்கிக் கொடு இல்லையென்றால் பணத்தை கொடு என்று கேட்டார்.
இதனால் சனிக்கிழமை (18.07.20) திருக்கோவிலூர் அடுத்த மாடாம்பூண்டி பகுதிக்கு வா என்று ஸ்டீபன் மனோஜை போனில் அழைத்தார். இதனை அடுத்து ஸ்டீபன் சொன்ன இடத்திற்கு மனோஜ் சென்றார். பின்னர், இருவரும் அங்கு உள்ள வனப்பகுதியில் மது அருந்தினர். அப்போது இங்கு மது அருந்தக்கூடாது என வனக்காவலர் எச்சரித்து சென்றார்.
இதனிடையே போதை தலைக்கேறிய நிலையில் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஸ்டீபன், மனோஜின் கழுத்தை நெரித்து, கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு ஓடி விட்டார். இதனிடையே இரவு வெகுநேரமாகியும் மனோஜ் வீட்டிற்கு வராததால் அவரது பெற்றோர் பகண்டை கூட்ரோடு காவல்துறைக்கு புகார் அளித்தனர்.
அப்புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறைக்கு, சந்தேகத்தின் பேரில் ஞாயிற்றுக்கிழமை (19.07.20) ஸ்டீபனை பிடித்து விசாரித்தனர். அப்போது ஸ்டீபன் தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியதுடன், காவல்துறையுடன் சேர்ந்து மாடாம்பூண்டி வனப்பகுதியில் மனோஜை தேடியுள்ளார். அதன் பின்னர் வனக்காவலரிடம் காவல்துறையினர் விசாரித்தனர்.
அப்போது வனக்காவலர் மனோஜியுடன் ஸ்டீபனும் சேர்ந்து மது அருந்திய விவரத்தை தெரிவித்தார். இதையடுத்து ஸ்டீபன் மீது காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர். மேலும், திருக்கோவிலூர் டிஎஸ்பி மகேஷ், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் திருப்பாலபந்தல், பகண்டை கூட்டு சாலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஸ்டீபனிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மனோஜை கொலை செய்ததை ஸ்டீபன் ஒப்புக்கொண்டார்.
அதன்பின்னர் அங்கிருந்து மனோஜின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனோஜை கொலை செய்ததற்காக ஸ்டீபனை பொதுமக்கள் தாக்கினர். அதில் ஸ்டீபனுக்கு சிறிது காயம் ஏற்பட்டதால் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் திருப்பாலபந்தல் காவல் நிலையத்திற்கு மேல் விசாரணைக்காக அழைத்து வந்தனர்.
இதனையடுத்து நேற்று (20.07.20) மாலையில் மனோஜின் உடல் உடற்கூறாய்வு முடிந்து ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு கொண்டுவந்தனர். மேலும் காவல்துறையினர் ஸ்டீபனிடம் தடயங்களை காண்பதற்காக கொலை செய்த இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி தடயங்களை கைப்பற்றினர்.
இதற்கிடையே குற்றவாளியான ஸ்டீபனை கைது செய்யவில்லை என்று கூறி ரெட்டியார்பாளையத்திலிருந்து மனோஜின் சடலத்தை எடுத்துக்கொண்டு பகண்டை கூட்டு சாலையில் உள்ள நடுரோட்டில் வைத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இத்தகவலறிந்த திருக்கோவிலூர் டிஎஸ்பி மகேஷ் தலைமையிலான ஏராளமான காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், குற்றவாளியான ஸ்டீபனை இரவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறோம் என்று உறுதியளித்தனர். அதன் பின்னரே அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இதையும் படிங்க: முக்கொம்பு சுற்றுலா மையத்தில் எரிந்த நிலையில் பெண் சடலம் கண்டெடுப்பு!