ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட முதல் ஆட்சியராக கிரண் குராலாவும், காவல் கண்காணிப்பாளராக ஜெயச்சந்திரனும் நியமிக்கப்பட்டனர். தற்போது ஒழுங்குமுறை விற்பனைக்கூட கட்டடத்தில் தற்காலிகமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதேபோல், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உலகங்காத்தான் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் இயங்கி வருகிறது.
இதனிடையே, வீரசோழபுரத்தில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான 35.1 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு, அதில் பத்தரை ஏக்கரில் ஆட்சியர் அலுவலகமும், மூன்றரை ஏக்கரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. 5 ஏக்கர் பரப்பளவில் மாவட்ட நீதிமன்றம் மற்றும் 8 ஏக்கரில் விளையாட்டு மைதானம் ஆகியவையும் கட்டப்படவுள்ளது.
முதல் கட்டமாக 104 கோடி ரூபாய் மதிப்பில் 8 அடுக்குகள் கொண்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்படுகிறது. தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் பழனிசாமி, காணொலி மூலம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப்பணிக்கு நாளை அடிக்கல் நாட்டவுள்ளார். இதையொட்டி, வீரசோழபுரத்தில் அலுவலகம் அமையவுள்ள இடத்தில் மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இதையும் படிங்க: 'ஸ்டேட் வங்கி கிளார்க் நியமனங்கள் - இட ஒதுக்கீடு முறையாக அமலாகிறதா?'