விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அண்மையில் யு-டியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பெண்கள் குறித்தும் மதம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.
இதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அம்பேத்கர் சிலை முன்பு, விசிக தலைவர் தொல்.திருமாவளவனை கைது செய்யக்கோரி பாஜக-இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது திருமாவளவனை பாஜகவினர் அவதூறாகப் பேசியதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே இங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராமநாதன் தலைமையில் அங்கு 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் பாஜகவினரும் இந்து முன்னனியினரும் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கைது செய்யக்கோரி, அவதூறாகப் பேசி வந்ததை அடுத்து இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து 25க்கும் மேற்பட்ட பாஜகவினரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:தொழிலாளர்களை ஏற்றி வந்த வாகனம் விபத்து: 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்!