கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாஜகவின் எட்டாவது ஆண்டு சாதனைகள் விளக்கப் பொதுக்கூட்டம் மாவட்டத் தலைவர் பாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் பாஜக தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் ஏஜி.சம்பத், கரு நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் கரு. நாகராஜன், ”ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்புத்தெரிவித்த தமிழ்நாடு அரசு இன்று பெட்ரோல், டீசல் விலையில் ஜிஎஸ்டி கொண்டு வர வேண்டும் எனக் கூறுகின்றனர். சில பொருட்களுக்கெல்லாம் ஜிஎஸ்டி வரி கிடையாது. அந்த பொருட்களில் கொள்ளை லாபம் அடிக்கின்றனர். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்த பிறகும்,மாநில அரசு விலையைக் குறைக்கவில்லை’’ எனவும் குற்றம்சாட்டினார்.
மேலும் அவர், ' நடிகர் விஜய் பருப்பு உள்ளிட்டப்பொருட்களுக்கு அரசு வரி விதிக்கின்றது என சினிமாவில் வசனம் பேசுகிறார். டாஸ்மாக் சரக்கிற்கு வரி இல்லை. நடிகர் விஜய் குழந்தை என்பதால் அவருக்கு ஒன்றும் தெரியாது. அரிசி பருப்பு உள்ளிட்ட 146 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது. ஆனால், டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுவிற்கு 300 விழுக்காடு வரி விதிக்கப்படுகிறது' எனக் கூறினார்.
இதையும் படிங்க:கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு விவேகானந்தர் பெயரை சூட்டுக - அண்ணாமலை