கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையை அடுத்த பழைய நன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம். இவருக்கு மூன்று மகள்கள் இருந்துள்ளனர். அதில் மூத்த மகள் நித்யஸ்ரீ, திருச்சியிலுள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை நர்ஸிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இரண்டாவது மகள் பன்னிரண்டாம் வகுப்பும், மூன்றாவது மகள் பத்தாம் வகுப்பும் படித்துவருகின்றனர்.
இந்நிலையில், கரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மூன்று மகள்களுக்கும் சேர்த்து ஆறுமுகம் ஸ்மார்ட் போனை வாங்கி கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து செல்போன் மூலம் ஆன்லைன் கல்வி கற்பதில் சகோதரிகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த நித்யாஸ்ரீ விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். அதன்பின் மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த சங்கராபுரம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தா. உதயசூரியன், அவர்களுக்கு ஆறுதல் கூறி ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர், திமுக தலைவர் ஸ்டாலின் ஆன்லைன் வகுப்பிற்கு தடை விதிக்கக் கோரியும், அரசு அலட்சியம் காட்டியதால் தான் இது போன்ற துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கட்சியின் தலைமையிடம் இது குறித்து எடுத்துக் கூறி, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவேன் என்று தெரிவிதார்.
இதையும் படிங்க:மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த காட்டு யானை!