கள்ளக்குறிச்சி மாவட்டம் லட்சியம் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவரின் மூத்த மகன் மனோஜ். டிப்ளமோ படித்துள்ள மனோஜ் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு, தென்தொரசலூரைச் சேர்ந்த மணிவேல் என்பவரால் சவுதி அரேபியா அழைத்துச் செல்லப்பட்டார்.
ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கட்டி டூரிஸ்ட் விசாவில் ஓட்டுநர் வேலைக்காக சென்ற மனோஜிற்கு இரண்டு மாதங்கள் மட்டும் ஓட்டுநர் வேலை கொடுத்துள்ளனர். பின்னர் பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் பணியை கொடுத்துள்ளனர். இந்நிலையில், தனது முதலாளி என்னை கொத்தடிமை போல் நடத்துகிறார். சாப்பிட உணவை அளிக்காமல் வெறும் பணம் மட்டுமே தந்து அடித்து உதைப்பதாகவும் தனது தந்தைக்கு அனுப்பிய வீடியோவில் தெரிவித்துள்ளார்.
வீடியோ மூலம் தனக்கு நேர்ந்த கொடுமையை எடுத்துக் கூறி கண்ணீர் விட்டு கதறியுள்ளார். மகன் கதறுவதைக் கண்ட மனோஜின் பெற்றோர் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இது தொடர்பாக, தங்களது மகனை மீட்டுத்தரக்கோரி மனோஜின் பெற்றோர் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்திலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினரிடமும் மனு அளித்துள்ளனர்.
குடும்ப வறுமையை போக்க வெளிநாட்டிற்கு செல்லும் படித்த இளைஞர்கள், கொத்தடிமைகளாக நடத்தப்படும் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில், சவுதி அரேபியாவில் போராடி வரும் இளைஞரை காக்க தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவுக்கு புத்திசாலிகள் வாக்களிக்க மாட்டார்கள்: துக்ளக் சொல்வதை ஏற்கிறதா அதிமுக?