சுதந்திர தினம் மற்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஆக.16) முழு ஊரடங்கு என்பதால் இரண்டு நாட்கள் மதுக்கடைகள் அடைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அம்மன்கொள்ளைமேடு பகுதியில் ஆறுமுகம் என்பவர் தமது வீட்டில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து வருவதாக திருக்கோவிலூர் காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் ஆறுமுகம் வீட்டில் திடீரென காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதில், 288 குவாட்டர் மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவரை கைது செய்த காவல் துறையினர் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், சோழபாண்டிபுரம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருத்த 58 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தப்பியோடிய சுப்பிரமணியனை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.