ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கடுக்காம்பாளையம், பொலவக்காளிபாளையம், வெங்கமேடு, கோரக்காட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகளாக வீடுகளில் வளர்த்து வரும் ஆடுகள், நாட்டு கோழிகள் இரவு நேரங்களில் திருடப்பட்டு வந்துள்ளன. ஆடு மற்றும் கோழி திருட வரும் கும்பல், வீட்டின் முன்பக்க கதவை பூட்டி விட்டு திருடிச் செல்வதும், ஆடுகளை விவசாய நிலத்தில் கழுத்தை அறுத்து எடுத்துச் செல்வதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.
இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுக்காம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கமேட்டில் ஒரு பெண் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு திருடர்கள், வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, அங்கு இருந்த 15-க்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகளை திருடி, துணியில் வைத்து மறைத்து திருடிச் சென்றதாகவும், அப்போது கோழிகளின் சத்தம் கேட்டு பெண் வெளியே வர முயன்றபோது, கதவு பூட்டப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து அருகில் உள்ளவர்களுக்கு செல்போன் மூலமாக தகவல் கூறியதாகவும் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து கிராம மக்கள், பெண்ணின் வீட்டிற்கு வந்தபோது, கோழிகளை திருடிக் கொண்டு இருந்த இருவரும், திருடிய கோழிகளை விட்டு விட்டு, அங்கிருந்து தப்பியோடி உள்ளனர். இரவு நேரத்தில் கொள்ளையர்களின் இந்த செயலால் தப்பிச் செல்லாமல் இருக்க கரும்பு காட்டைச் சுற்றிலும் விடிய விடிய பொதுமக்கள் காவல் காத்திருந்த சம்பவமும் அரங்கேறியது.
பின்னர், பொழுது விடிந்ததும் இரு திருடர்களும் ஆளுக்கொரு பக்கமாக தப்பிக்க முயற்சிக்கவே, இதைக் கண்டு ஆத்திரமடைந்த கிராமத்தினர், அவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர். 4 ஆண்டுகளாக பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடு, கோழிகளை இழந்த கிராம மக்கள் ஆத்திரத்தில் பிளாஸ்டிக் பைப், மூங்கில் தடி என கையில் கிடைத்தவைகளால் சரமாரியாக அவர்களைத் தாக்கி உள்ளனர். மேலும், திருட்டுக்கு உதவியாக இருக்கும் கூட்டாளிகள் யார் எனக் கேட்டு, 100-க்கும் மேலான கிராமத்தினர் சரமாரியாக தர்ம அடி கொடுத்துள்ளனர். இதனால், படுகாயமடைந்த திருடர்கள் இருவரும் அங்கேயே சுருண்டு விழுந்துள்ளனர்.
பின்னர், இது குறித்து தகவல் அறிந்த சிறுவலூர் காவல்துறையினர், சம்பவ இடத்தில் கோழி திருடி கிராம மக்களிடம் பிடிபட்ட இரு இளைஞர்களையும் மீட்டனர். விசாரணையில், கோபி அருகே ஒரு ஊரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்த இரண்டு பேரின் மீது சாதிய வன்கொடுமை நடத்தப்பட்டுள்ளதாகவும், மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது ஆடு, கோழிகளை திருடியதாகக் கூறி தாக்குதல் நடந்ததாக பல்வேறு அமைப்புகளும் குற்றம் சாட்டின.
இதைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத 20 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கோபி வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பல்வேறு தலித் அமைப்புகள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், “பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மீது சாதிய வன்கொடுமையில் தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும், சாலையோரத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது கோழி, ஆடு திருடியதாகக் கூறி 20-க்கும் மேற்பட்டோர் கொடூரமாக தாக்குதல் நடத்தியதுடன், அவர்களது உடல் மற்றும் வாயில் சிறுநீர் கழித்ததாகவும் தெரிய வருகிறது.
ஆகவே, தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு மட்டும் செய்யப்பட்டு, இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு அரசின் சார்பில் உயர் சிகிச்சை அளிப்பதுடன், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” எனவும் கூறி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கையும் உரிய நிவாரணமும் வழங்கப்படவில்லை எனில், பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தப் போவதாகவும் பல்வேறு அமைப்புகள் தகவல் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஆடுகளைத் திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஒரு குற்ற வழக்கு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், 'பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடப்பதாகவும், இருவரில் ஒரு இளைஞர் அப்பகுதியில் பல்வேறு தொடர் திருட்டில் ஈடுபட்டவர்' எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "200 சதவீதம் இரண்டு முகமும் ஒன்றல்ல" - பிரபாகரன் மகள் துவாரகா சர்ச்சை வீடியோ குறித்து கார்டூனிஸ்ட் பாலா கருத்து