திருப்பூர் மாவட்டம் போயம்பாளையத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் திருப்பூரிலுள்ள ஆயத்த ஆடை நிறுவனமொன்றில் டைலராகப் பணியாற்றிவந்தார். மேலும் கடந்த ஓராண்டுக்கு முன், தான் காதலித்த கலாவதி என்பவரை வீட்டுச் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இதுவரை இருவருக்கும் குழந்தைகள் இல்லை.
இந்நிலையில் தனது நண்பர் கோகுலக்கண்ணனுடன் நேற்று (செப்.2) ஈரோடு மாவட்டம் திங்களூர் நல்லாம்பட்டியில் உள்ள நண்பர் ராகவன் வீட்டிற்கு வந்துள்ளனர்.
பின்னர், மூவரும் மதியம் துடுப்பதி அருகேயுள்ள ராக்காவலசு கீழ்பவானி கால்வாயில் குளிக்கச் சென்றுள்ளனர். நாகராஜும், ராகவனும் கால்வாயில் குளித்துக் கொண்டிருக்கையில் எதிர்பாராதவிதமாக நாகராஜ் ஆழமான பகுதிக்கு சென்று தத்தளிக்கத் தொடங்க தண்ணீரும் வேகமாக வந்து கொண்டிருந்ததால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதனைச் சற்றும் எதிர்பாராத நண்பர்கள் பெருந்துறை தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் பவானி மீனவர்கள் உதவியுடன் சுமார் 4 மணி நேரம் கடுமையாகத் தேடி ஆழத்தில் பாறைக்கடியில் சிக்கிக் கொண்டிருந்த நாகராஜின் உடலை மீட்டனர். பின்னர் உடற்கூறாய்வுக்காக உடலை பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நண்பர்களுடன் குளிக்க வந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:காய்கறி கடையில் மதுபானம் விற்பனை செய்த மூதாட்டி கைது!