ஈரோடு: கருங்காளையத்தை சேர்ந்த 22 வயது இளைஞர், அதேபகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிய கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார், ஈரோடு டவுன் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இளைஞரை கைது செய்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் 2019ஆம் ஆண்டு முதல் நடந்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று (மார்ச் 25) இந்த வழக்கு, நீதிபதி மாலதி முன் வந்தது. அப்போது அவர், சிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞருக்கு, பிரிவு 366இன் படி 3 ஆண்டு சிறை தண்டனையும் 1000 அபராதமும் கட்ட தவறும் பட்சத்தில் 3 மாத சிறை தண்டனையும், போக்சோ சட்டம் 2012இன் படி 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் அபராதமாக 5000 மும் கட்டத் தவறும் பட்சத்தில் 3 மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு, தமிழ்நாடு அரசின் நிதி உதவி ஒரு லட்சம் ரூபாயை, ஒரு மாதத்திற்குள்ளாக அரசு வழங்கவும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு பரிந்துரை செய்து தீர்ப்பு அளித்தார். இதையடுத்து, காவல்துறையினர் அந்த இளைஞரை, கோயம்புத்தூர் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.