பவானிசாகர் அணையைப் பார்ப்பதற்காக நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்கின்றனர். கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில் பவானிசாகர் அணை பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பவானிசாகர் அணை பூங்காவைச் சுற்றிப் பார்ப்பதற்காக வரும் பார்வையாளர்கள் பூங்காவைப் பார்க்க முடியாத நிலை உள்ளதால் பவானிசாகர் அணை முன்பு உள்ள பவானி ஆற்றில் இறங்கி குளித்து மகிழ்கின்றனர்.
மேலும் ஒரு சில இளைஞர்கள் ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கி செல்போனில் செல்ஃபி, புகைப்படம் எடுக்கும் செயலில் ஈடுபடுகின்றனர்.
நேற்று (ஏப். 18) மாலை 5 இளைஞர்கள் பவானிசாகர் அணை முன்பு புதிய பாலம் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் பவானி ஆற்றில் இறங்கி, நீர் வேகமாகச் செல்லும் பகுதியில் நின்றுகொண்டு செல்ஃபி, புகைப்படம் எடுப்பதில் ஆர்வம்காட்டினர்.
ஆற்று நீர் வேகமாக ஓடும் அப்பகுதியில் இளைஞர்கள் தவறி நீரில் விழுந்தால் அடித்துச் சென்று நீரில் மூழ்க வாய்ப்புள்ள நிலையில் சிறிதும் பயம் இல்லாமல் ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுத்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, பவானிசாகர் அணை பூங்கா அருகே பவானி ஆற்றில் இறங்கி செல்ஃபி, புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்க காவல் துறையினர் அப்பகுதிக்கு ரோந்து சென்று சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - உண்மை நிலவரம் என்ன?