ஈரோடு மாவட்டம் வெண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி . இவரது மகன் மௌலி. இவர் காங்கேயத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். வாரம் ஒருமுறை வீட்டுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்த இவர், தந்தையிடம் வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
ஆனால், இவர் நான்கு நாட்களுக்கு மேலாகியும் வீடு திரும்பாததால் கடந்த 24ஆம் தேதி மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் மௌலியின் தந்தை புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் மௌலியை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை வெண்டிப்பாளையம் காலிங்கராயன் வாய்க்காலில் உடல் சிதைந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்ததையடுத்து, உடனடியாக காவல்துறையினர் வாய்க்காலில் கிடந்த சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வாய்க்காலில் கிடந்த சடலம் காணாமல் போன மௌலி என்பது தெரியவந்தது. இதனையடுத்து விசாரணையை துரிதப்படுத்திய காவலர்கள், ஈரோடு முனிசிபல் காலனியைச் சேர்ந்த சரவணன் என்பவர் மூன்று பேருடன் சேர்ந்து மௌலியை கொலை செய்ததை கண்டறிந்தனர்.
லக்காபுரம் பகுதியில் டாஸ்மாக் கடையை குத்தகை எடுத்து நடத்தி வரும் சரவணனிடம், மௌலி அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியதும், அதனால் ஏற்பட்ட தகராறில் சரவணன், குணசேகரன், சிவக்குமார், பிரதாப் ஆகியோர் மௌலியை அரிவாளால் வெட்டி கொலை செய்து அருகிலுள்ள காலிங்கராயன் வாய்க்காலில் வீசி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து மொடக்குறிச்சி போலீசார் சரவணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள குணசேகரன், சிவக்குமார், பிரதாப் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.